பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.” என்று பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,””நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த விருதை நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்கு தகுதியுள்ளவனாக நான் என்னையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.”
பாரத ரத்னா விருது எப்போது வாங்கப் போகிறீர்கள்..?
“நான் எப்போதுமே மெதுவாகத்தான் போவேன். பள்ளிப் படிப்பில்கூட அப்படித்தான். இந்த நாட்டில் மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் விருதுகள். நீங்கள் சொல்வது போன்று அதுதான் அடுத்த கட்டம் என்று நினைத்தால், அதுவும் சாத்தியம்தான்.”
கிரிக்கெட்டில் 25 ஆண்டுகள் சாதனைபடைத்த சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளார்கள். ஆனால், நீங்கள் 50 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கிறீர்களே. உங்களுக்கு கிடைக்காதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“கண்டிப்பாக எதுவும் நினைக்கவில்லை. சுதந்திரப் போராட்டம் மாதிரிதான். கிடைத்தாலும் சரி, மறந்தாலும் சரி எனக்கு ஒ.கே தான். இருப்பதற்கும், பணி செய்வதற்கு தகுதியுடையவனாக இருப்பதே பெரிய பட்டம்.”
பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து கூறினாரா..?
“இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.”
இவ்விருதை யாருக்கு சமர்பிக்க விரும்புகிறீர்கள்..?
“எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கு, குடும்பத்திற்கு இந்த விருதை நான் சமர்ப்பிகிறேன். சம்பளம் வாங்கிக்கொண்டும், சம்பளம் கொடுத்தும் கற்றுக்கொடுத்தவர்கள் அனைவருக்குமே இந்த விருதை சமர்ப்பிகிறேன். சண்முகம் அண்ணாச்சியும், பாலசந்தர் அவர்களும் இதில் முதன்மையானவர்கள். அது மறக்க முடியாத நன்றிக்கடன். தீர்க்க முடியாத கடன். எனக்கு இகழ்வுகள் ஏற்படும் போது மட்டுமே, அது என்னுடையதாகிறது. எனக்கு புகழ் வரும் போது எல்லாம் எனக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள்.”
ஆஸ்கர் விருது எப்போது..?
“இந்த ஊர்ல வியாபாரம் பண்றவங்களுக்கு ஐ.எஸ்.ஐ தான் முக்கியம், யு.எஸ்.ஐ எதற்கு? அந்த ஊர்ல வேலை செய்யும்போது யு.எஸ்.ஐ பார்த்துக் கொள்ளலாம். அந்த ஊருக்கு வியாபாரத்திற்கு போகும்போது கண்டிப்பாக அது பெரிய பெயராக இருக்கும். அவங்களுக்கும், எனக்கும் தேவைப்பட்டால் போவேன்.”
எப்போதுதான் மனநிறைவு பெறுவீர்கள்..?
“நிறைவு என்பதே எனக்கு கிடையாது. எனக்கு பசி மாதிரிதான். இன்றைக்கு நிறையுற மாதிரியிருக்கும், நாளைக்கு பசிக்கும். என்னோட தேடல் எல்லாம் பசி. சினிமா நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் ‘போதும்’ என்றால் எப்படி?”
இந்தத் தருணத்தில் உங்களது ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..?
“இந்த விருது, இனிமேல் நான் செய்யப் போகும் வேலைக்கான பாராட்டு. வேலை செய்ததிற்கான பாராட்டு என்று நீங்களும் நினைக்க கூடாது, நானும் நினைக்கவில்லை. என்னை ஊன்றுக்கோளாக வைத்து அவர்கள் உயர்வதற்கும் நான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் பொதுப்பணி செய்வதற்கும் நான் ஒரு ஊக்கியாக இருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் ஊக்கம் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் ஊக்கமாகத்தான் பார்க்கிறேன்.”
கடந்தாண்டு இதே நேரத்தில் விஸ்வரூபம் பிரச்சினை. இந்தாண்டு பத்ம பூஷண் விருது. அதற்கான மருந்தாக நினைக்கிறீர்களா?
“அப்படி நான் எடுத்துக் கொண்டால் அது கொடுக்கல் வாங்கலாகிடும். அது அல்ல என்று நான் நினைக்கிறேன்.”
விஸ்வரூபம் தடை செய்யப்பட்டபோது இதே இடத்தில் தான் பேசினீர்கள். விருதுக் கிடைத்தவுடனும் இதே இடத்தில் தான் பேசுகிறீர்கள். உங்களது மனநிலை இப்போது எப்படியிருக்கிறது?
“ஒரே மனநிலைதான். இதே இடத்துலதான் நான் சின்ன பிள்ளையா நடிகனா வருவேனா மாட்டேனா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதே இடத்துலதான் பாலசந்தர் சார் கூப்பிடுறாருன்னு சொன்னப்போது இங்க உட்காந்துதான் யோசிச்சிட்டு இருந்தேன். பல விஷயங்கள் இந்த இடத்துல நடந்துருக்கு. ஒரு பக்குவான மனநிலைக்கு என்னை கொண்டு வந்துவிட்டார்கள். எனக்கு எல்லாமே படிக்கட்டுதான்.”
நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது..?
“ஒரு படத்தைப் பற்றி தனியாக கூற முடியாது. சிவாஜி சாரை எடுத்துக் கொண்டால் ஒரு படத்தைப் பற்றி கூற முடியாது. கப்பலோட்டிய தமிழன், பராசக்தி, பாசமலர் இப்படி எல்லாமே சேர்ந்துதான் சிவாஜி சார் படங்கள் பற்றி பேசும்போது வரும். நான் ஒரு படம் முடிச்சுட்டு அடுத்த படம் போகும் போது எனக்கு அதுதான் முக்கியமான படமாக தோன்றும். வாழ்க்கையின் முக்கியமான படமாகவும் மாறிவிடும்.”
மருதநாயகம் பணிகள் எப்போது தொடங்க இருக்கிறீர்கள்..?
மருதநாயகம் செய்யணும். காசு கொடுங்க பண்ணிடுறேன்.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா..?
“எல்லாருமே அரசியல்வாதிகள்தான். 5 வருஷத்திற்கு ஒரு தடவை கைல கறையை போட்டுக் கொள்கிறோம். விரல்ல வைக்குற அந்தக் கறை போதும் கைப்பூறம் எதற்கு.”
இன்று 65-வது குடியரசு தினம். இதையொட்டி நீங்கள் சொல்லும் செய்தி..?
“இதுவரைக்கும் அடையவில்லை என்பதற்கான எல்லாச் சான்றும் இருக்கிறது. அடைந்து விட்டோம் என்பதற்கான அடையாளங்களும் இருக்கிறது. மேலை நாடுகளில் எல்லாம் சாய்ச்சுக்கிட்டு வந்துட்டோம்னு சொல்றாங்களே அது இன்னும் இந்தியாவில் அடையவில்லை. இன்னும் பிளவுகள், சாதி ஒழிந்த பாடில்லை. அப்படியிருக்கும் போது நாம் எப்படி பெருமைப்பட்டு கொண்டிருக்க முடியும்..?
பாரதியார் பாடின பாப்பாக்களுக்கு எல்லாம் கொள்ளுப் பேத்திகள் பிறந்து விட்டார்கள். ஆனால் இன்னும் அந்த சாதியை விட்டபாடில்லை. சாதிக்காக இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது. 65 ஆண்டுகள் எல்லாம் வேண்டாம். 6.5 என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.”
உங்களோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவும் விருது வாங்க இருக்கிறாரே. பேசினீர்களா..?
“நேற்றே அவருக்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு கிடைக்கும் எல்லா புகழும் எனக்கு கிடைத்த மாதிரி. ஞான பீடம் விருது மாதிரி என்ன விருது வாங்கினாலும், எனக்கு கிடைத்த சந்தோஷம் வருகிறது. அவ்வளவு நெருங்கிய நட்பு எங்களுடையது. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதும், என்னை பல விஷயங்களுக்காக அவர் தனிமையில் வந்து பாராட்டுவதும் இப்படி பல நிகழ்வுகள் எங்களுக்குள் நடந்திருக்கின்றன. பெரிய சந்தோஷம் என்னென்னா, அவருடன் சேர்ந்து விருது வாங்க போறேன் என்பது தான்.”
விஸ்வரூபம் 2 படப் பணிகள் எந்தளவில் இருக்கிறது..?
“வேலைகள் முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் இசை, கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது.”
சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா..?
“நான் சுயசரிதை என்ற விஷயத்திற்கு எதிரானவன். பேட்டிகள் என்றால் ஆர்வத்தோடு இருப்பேன். நிறைய சுயசரிதைகள் பொய்யானவை தான். சுயசரிதையை எழுத மாட்டேன். நிஜம் பேசணும். நிஜம் பேசணும் அப்படிங்கிற வீராப்புல பல பேரை புண்படுத்திற கூடாது. என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிட முடியுமானு எனக்கு தெரியல. பேட்டி வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என் மீதிருக்கும் எல்லா சந்தேகங்களும் அப்படியே இருக்கட்டும், அமையட்டும்.”
0 comments:
Post a Comment