Sunday, December 22, 2013

அழகிய குறிப்புகள்...



   ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.

உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

· மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும். எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் நல்லது.

· நீர் அருந்த வேண்டும். சீரகம் கலந்து நன்கு காய்ச்சிய கொதிநீரை ஆறவைத்து குடிக்க வேண்டும்.

· இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம், பழுத்த கொய்யா மற்றும் அந்த அந்த சீசனில் அதிகளவு விளையும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களில்தான் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

· கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

· அதிகம் குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ முகத்தைக் கழுவக் கூடாது.

· முகத்தைத் துடைக்க மென்மையான பருத்தித் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.

· வெள்ளரிப் பிஞ்சை வாங்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சாத பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதை எடுத்து முகத்தின் மீது தடவினால் முகம் பொலிவுறும்.

· முகத்தில் பருக்கள் தோன்றினால் அதைக் கிள்ளக் கூடாது.

· இரவு படுக்கைக்கு முன் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். பின் சுத்தமான சந்தனத்தோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் செய்துவந்தால் உங்கள் முகமும் கண்ணாடி போல் ஜொலிக்கும் .

· மன அழுத்தம், அடிக்கடி கோபம், பயம், எப்போதும் ஒரே சிந்தனை போன்றவற்றின் தாக்கம் முதலில் முகத்தில்தான் ஆரம்பிக்கும்.

· திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது வசம்பு, ஜாதிக்காய் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மாறும்.

· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· உணவில் அதிக காரம், உப்பு சேர்க்கக் கூடாது.

· தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வது நல்லது.

மிகவும்...

*மிகவும் கசப்பானது தனிமையே!

*மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!

*மிகவும் துயரமானது மரணமே!

*மிகவும் அழகானது அன்புணர்வே!

*மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!

*மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!

*மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!

*மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!

*மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

தேவையான மூன்றுகள்?


இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை.

ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை.

பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.

கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு.

அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.

தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.

பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.

நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை.

ஒரு தந்தையின் கடிதம்!!!



ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.


இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.