Sunday, December 22, 2013

மனிதப் பண்பு ( தெய்வம் நீ என்று உணர் )

தெய்வம் நீ என்று உணர்

இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராய்ந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப மறுக்கின்ற உலகம்.


பொறுமை இல்லை

‘சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவது இயலும்’ என்பதைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளியதும் இந்த உலகந்தான். ஆனால் அதுவே உண்மையான போது, அதனை ஒத்துக்கொண்டதும் இந்த உலகந்தான். ஆதலின் காட்சி அளவில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப இயலாத நிலை உலகில் நாளும் வளர்ந்து வருகின்றது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியால் கற்பனை என்று கொண்டவற்றுள் சில உண்மையானதாகவும் உண்மை என்று கொண்டவற்றுள் பல கற்பனை யானதாகவும் மாறி வருவதையும் காண்கின்றோம்.

பரபரப்பு மிகுந்த இவ்வுலகில் எதையும் ஆழ உணர்வதற்கு மக்களுக்குப் போதிய நேரம் வாய்ப்பதில்லை; பொறுமையும் இருப்ப தில்லை. உண்டு செரித்த பின் மனிதனுக்குக் கிடைக்கும் உயிர்ச்சத்து (வைட்டமின்), மாத்திரை வடிவிலேயே கிடைக்கும் என்றால் பிறகு உணவைத் தேடி அலைவானேன். அதுபோல்தான் எல்லாவற்றிலும். அதனால் ஆழ உணர்ந்து தெளிய வேண்டும் என்ற விருப்பமும் மக்களுக்கு வாய்ப்பதில்லை.


நம்பிக்கை குறைகின்றது

இத்தகைய சூழ்நிலையில் இயற்கையின் எல்லையில்லாத ஆற்றலை, அதன் அமைப்பை காரண காரியத் தொடர்பை மனிதன் அறிந்து போற்றுவதற்குரிய வாய்ப்பு இல்லை. எதையும் நேரில் கண்டோ, உற்று உணர்ந்தோ, சுவைத்து அறிந்தோ பழக்கப்பட்ட அவனுக்குப் பிறர் சொல்வதைக் கேட்பதில் நம்பிக்கை விழுவதில்லை. எல்லாவற்றையும் இயக்குகின்ற பேராற்றல் ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தாலும் உணர்வதில்லை. அதனால் பாதிப்பு நிகழாதபோது நன்மைகள் நிகழாத போது, நிகழ்கின்ற பெருந்தீமைகளைத் தடை படுத்த முடியாதபோது அந்தப் பேராற்றலைப் பற்றி அவன் ஏன் கவலைப் பட வேண்டும்? அதனால் நம்புதற்குரிய கூறுகளும் குறைந்து வருகின்றன.


நிறையும் குறையும்

இதற்கும் மாறாக மனிதன் நேரில் காணு கின்ற வேறொரு மனிதனை நம்புகிறான். அவனது மனிதனது குணநலன்களை நம்புகிறான் பெரும்பான்மையான நல்ல குணங்களை உள்ள ஒரு மனிதனை உலகம் மதிக்கிறது. அவனைத் தனது வழி காட்டி யாகக் கொள்கிறது. வாழ்க்கையே ஒப்பிட்டுப் பார்க்கும் ஒன்று தான். அந்த ஒப்பீட்டில் சிலர் மனநிறைவு கொள்கிறார்கள். சிலர் மனக்குறைவு கொள்கிறார்கள். நாமும் உயர வேண்டுமெனச் சிலர் புதிய எழுச்சியோடு செயல்படத் தொடங்குகிறார்கள். முறையான வாழ்வை உடையவர்கள் மன நிறைவு கொள்வதும், முறையற்ற வாழ்வை உடையவர்கள் மனக்குறைவு கொள்வதும் இயல்பே.


புதிய வழி நல்லதாக இருந்தால்

மக்களின் அளவுகோலாக விளங்கும் எடுத்துக்காட்டான மனிதனின் அருங் குணங்களை ஆராய்ந்தால் உண்மையை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இப்படிக் கால வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது இயல்புதான். ஒன்றில் இருந்த நம்பிக்கை வேறொன்றில் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். என்றாலும் எப்படி மாறினும் அடிப்படையான அறங்கள் மாறுவதில்லை. மக்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பதும், அற வழியில் வாழ வேண்டும் என்பதும் உயிர்களிடத்தில் அருள் காட்ட வேண்டும் என்பதும், என்றும் எங்கும் மாறாத ஒன்று. அதனாலேயே உலக இயக்கம் நடை பெறுகிறது.

மனிதப் பண்புகள் நிறைவந்தவர்களைச் சான்றோர் என்கின்றோம். சான்றோர் என்பதற்குரிய குணங்களை ஆராய்ந்தால் சாதாரண மனிதனும் சான்றோன் ஆவதற்குரிய வழி கிடைத்து விடுகின்றது. புதிய வழி நல்லதாக எளியதாக, காலத்திற்கு ஒத்ததாக இருந்தால் அதனைப் பின் பற்றுவதில் தவறு ஒன்றும் இருத்தற்கில்லை.


ஐந்து பண்புகள்

நம்முடைய முன்னோர்கள் சான்றோர்க்கு முதன்மையாக இருக்க வேண்டிய ஐந்து பண்புகளை வற்புறுத்திக் கூறியுள்ளார்கள். அவற்றுள் முதன்மையாக வேண்டப்படுவது அன்பு. தனக்கு வேண்டியவர்கள் என்றும் வேண்டாதவர்கள் என்றும் வேறுபாடு இன்றி எல்லாரிடத்திலும் அன்போடு நடந்து கொள்வது மனிதத் தன்மையின் பொது இயல்பு. இப்பொதுத் தன்மை பலரிடம் இல்லாத போது, இருக்கின்ற சிலர் நல்லவர்களாக – உயர்ந்தவர்களாகக் காணப் படுகிறார்கள். சிலரைக் கண்டால் மட்டும் இன்முகமும் வேறு சிலரைக் கண்டால் இன்னாமுகமும் காட்டுகின்றவர்கள் மனிதத் தன்மையிலிருந்து இழிந்து விடுகிறார்கள்.


எது நாணம்?

அடுத்து வேண்டப்படுவது பழி பாவங் களுக்கு அஞ்சுதலாகிய நாணம். செல்வச் செருக்காலும், செல்வாக்கு வாய்த்ததாலும் என்னால் எதுவும் முடியும் என்று நேர்மைக்கு மாறான செயல்களைச் சிலர் செய்கிறார்கள். ஆனால் அச்செயல் செய்வதற்கு அவர்கள் அஞ்ச வேண்டும். தூங்குகின்ற ஒருவனை ஒரு கோழைகூடக் கொன்று விடலாம். தன்னந்தனியாகச் செல்கின்ற ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் ஒருவன் கெடுத்து விடலாம். திறமையுள்ள ஒருவன் திறனற்றவர்களை எல்லாம் எதிர்த்து எதிர்த்து வெற்றி கொண்டு விடலாம். ஆனாலும் இவை களெல்லாம் நேர்மையான செயல்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா வசதிகளையும் பெற்றிருந்தும் இப்படி எண்ணிப் பார்த்துத் தவறு செய்யாமல் வாழ்கின்றவர்கள் உண்மையில் மனித சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். தங்களுடைய அற்ப வளத்தைத் தீய வழியில் பயன்படுத்துகிறவர்கள் அழிந்து போகிறார்கள். அந்த அழிவும் அவர்களாலேயே ஏற்பட்டு விடுகின்றது. ‘நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை, நாமாகவே தேடிக்கொள்வது’ என்பது நமது முன்னோர்கள் பட்டறிந்து மொழிந்ததாகும்.


ஒதுங்கி வாழ்கிறார்கள்

அன்பான உள்ளமும் நல்ல செயல்கள் செய்வதும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் போதாது. அவன் பிறருக்கு உதவுகின்றவனாகவும் விளங்க வேண்டும். நல்லவர்கள் பலர் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். பிறர் நலம், பொதுநலம் பற்றி எண்ணுவதும் செய்வதும் இல்லை. நல்லவர்கள் ஒதுங்கி வாழ்வதே நாடு கெட்டழிவதற்கு ஒரு காரணமாகும். தங்களின் நற்பண்பால் பலருக்கும் வழி காட்டியாக அமைவதோடு வாழ்க்கையில் முடியாதவர்களுக்கு உதவ அவர்கள் தாமாக முன்வருதல் வேண்டும். முடிந்தவர்களுக்கு உதவ ஆயிரம் பேர் முன் வருவார்கள். ஏழைகளுக்கு? எதுவும் அறியாதவர்களுக்கு? அத்தகையவர்களைக் கைதூக்கி விடுவதே ‘ஒப்புரவு’ என்பதாகும். இந்த ஒப்புரவினைச் செய்கின்றவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை; இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்கோ விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பலரானால் நாடு நலம் பெறும் என்பது உறுதி.


வாய்ப்பளிக்க வேண்டும்

மனிதன் குறைவுடையவன். முழுமைத் தன்மை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆதலின் யாரேனும் சூழ்நிலையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டு ஏதேனும் ஒரு தவற்றைச் செய்துவிட்டால் அதை கொண்டே அவர்களை வாழ்நாள் முழுதும் குற்றவாளியாக்கி விடுதலும் கூடாது. அவர்களுக்கு வாய்ப்பளித்துத் திருத்துவதற்கு முயல வேண்டும். தன் பற்களை உடைத்தவனுக்குக் காந்தியடிகள் பாத அணி செய்து தந்ததை அனைவரும் அறிவர். அதற்குப் பிறகு அந்த அதிகாரி தான் செய்த தவற்றுக்கு நாணிச் சீர்திருந்தி யதையும் உலகு அறியும். இதுபோல் வாழ்வில் ‘கண்ணோட்டம்’ செலுத்தி உலகைக் களிவித்து வாழ்கின்ற பண்பு உள்ளோர் பெருக வேண்டும். அவ்வாறு இருப்போர் பலரானால், இப்பண்பு ஊர் தோறும் சிலருக்கு வாய்க்குமானால் மனித இனம் மாண்புறும் என்பதில் எவ்வித ஐயப் பாடும் இல்லை. இத்தகைய பண்புடையோர் நம் இதயங்களில் வாழாமல் இல்லை.


பொய் குறையக் கவலை குறையும்

எல்லாவற்றிற்கும் மேலாக வாய்மையைப் போற்றுதலாகும். பேசுதல் என்பது எளியவற்றுள்ளும் எளிமையான செயல். ஆனால் அதில்தான் அரிய கவனம் செலுத்துதல் வேண்டும். எல்லாவற்றிலும் உண்மையாக நடந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால் இன்றைய நடை முறையில் பொய்யாமை போற்றப்படுவ தில்லை. மாறாக பொய்மை ஒரு கலை யாகவே வளர்ந்து விட்டது. பொய்யான புகழ்ச்சி, பொய்யான விருந்தோம்பல், பொய்யான பழக்க வழக்கங்கள், தனக்கு என ஒன்று. உலகின் பார்வைக்கு என வேறொன்று. இப்படிப் பொய்தவழும் உலகின் போக்குச் சொல்லும் தரமன்று. அதனால் ஏற்படுகின்ற தீமைகள் அளவிடற் கரியன. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொய் இருக்கின்ற அளவிற்கு கவலைகள் இருக்கின்றன. பொய் குறையக் குறையக் கவலைகள் குறையும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதனால்தான் காந்தியடிகள் உண்மையை உணர்ந்து அதனைக் கடை பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தன் வாழ்க்கையையே வாய்மையைப் போற்றும் சோதனைக் களமாகக் கொண்டு வெற்றி கண்டார்.


மனிதனே தெய்வம்

இறைவனை எண்ணரிய குணங்களை உடையவன் என்கிறோம். தூய்மையே வடிவானவன் என்று போற்றுகின்றோம் அவனை உணர முடியாதவர்கள், உணர வாய்ப்பில்லாதவர்கள், ஏன்? உணர விரும்பாதவர்கள், மனிதர்களில் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களின் பண்பு நலன்களை எண்ணிப்பார்த்து அவர்களைப் போல் நாம் விளங்க வேண்டும் என்று விரும்புவதும், அவர்களின் பண்புகளை ஆராய்ந்து அவற்றைப் பின்பற்றுவதும் சாலச் சிறந்ததாகும்.


நீ தான் மனிதன்

அன்பையும் நாணத்தையும் ஒப்புரவையும் கண்ணோட்டத்தையும் வாய்மையையும் உடையவர்களைச் சான்றோர் என்றார் உலகப் பெருமகனார் வள்ளுவர். இத்தகு குணங்களை வளர்த்துக் கொண்டால் தெய்வத்தைத் தேடி அலைய வேண்டாம் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்றார் பாரதி. அறிஞர்களின் கருத்துக்களைப் படித்து மகிழ்வதற்கும், பிறர்க்குச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்ற வழக்கத்தை மாற்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற் காகவே அவை எழுதப்பெற்றவை என்பதை உணர்ந்தால் தனி மனித நலத்தோடு சமுதாயமும் நலம் பெறும். அந்த நலம் வாய்க்கும் நாள் நம்மை நாம் உணரும் நாளாகும்.

0 comments:

Post a Comment