Sunday, December 22, 2013

எழுதுவது ஏன்?

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.


2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு?யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு?ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.


3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.


4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.



5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்


6) புகழ்பெற

ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்


7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்


8 ) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.


9) பழக்கத்தின் காரணமாக

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்நது அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது

0 comments:

Post a Comment