Sunday, December 22, 2013

அப்பா அம்மாவுக்கு !!!

குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றனர். ஒரு சூதுவாதும் தெரிவதில்லை. வளர வளர சூழலிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கின்றனர். எனவே, மழலைகளுக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். நாம் பல சமயம் நம் தவற்றை உணராமல் குழந்தையின் மேல் அவற்றைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அவற்றைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன், "சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே?" என்றும், "எதற்கு இந்த ஒப்பாரி?" என்றும், "மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்களைப் பலமுறை கேட்கும் குழந்தையின் மனதில் அவை பதிந்து விடுகின்றன.

குழந்தையின் ஒவ்வொரு புலனுக்கும் உகந்த சூழலை அமைப்பது அவசியம். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகள், கடவுளின் படங்கள், தேசத் தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.

காதுகளுக்கு தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற நல்ல கருத்து செறிந்த பாடல்களை அடிக்கடிக் கேட்கும் வாய்ப்புத் தர வேண்டும்.

அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும்.

இந்தக் காட்சி நமக்குப் புதிதல்ல: பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி, "தத்தித் தத்தி" நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது, "வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்கு 'கொல் கொல்'லுன்னு இருமல் வேறு" மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப, மன்ஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.

குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள், " அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்" என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.

குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக் கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல், எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் சொல்லிக் கொடுக்க, பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.

அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட, சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.

0 comments:

Post a Comment