Sunday, December 22, 2013

கனவுகள் நனவாகும் காலம்!!!


திட்டங்கள் இல்லாமல் இலக்குகள் இல்லாமல் வாழ்கிற  வாழ்க்கையில் சுவாரஸ்யம் எப்படி இருக்க முடியும். அந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்று தோன்றும். ஆனால்  குறியீடுகளின் அடிப்படையில் குறிக்கோள்களை குறுக்கி கொள்ள வேண்டாம் என்று தான் கீழே வரும் கட்டுரை நமக்கு  அறிவுறுத்துகிறது .வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து இலக்குகள் பற்றிய பார்வையும் புரிதலும் இருக்க வேண்டும் என்ற இடத்துக்கு காலம் நம்மை அழைத்து வந்திருக்கிறது.


இலக்குகள் என்பவை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்புக்கள் அதிகரித்து இருக்கும் இன்றைய காலகட்டத்தின் தேவை.15 வருடங்களுக்குக் முன்பு வரை கூட இலக்கு என்பதை யாரோதான் தீர்மானித்து வந்தார்கள். நம்ம குடும்பத்தில யாருமே கலெக்டருக்குப் படிக்கல, அதனால இவனை கலெக்டர் ஆக்கிடணும்; "சுப்ரமணியன் டாக்டருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குது பாரு. உன்  புள்ளைய எப்பாடுபட்டாவது டாக்டர் ஆக்கிடு; என்ற பெரும்பாலான குறிக்கோள்கள் , திணிக்கப்பட்ட இலக்குகளாகவே இருந்து வந்திருக்கின்றன.


சமீப காலத்தில் அவனுக்கு/ அவளுக்கு எது புடிக்குமோ அந்த துறையில் ஆளாக்கணும் என்ற பேச்சு வந்திருக்கிறது.


காலம் மாறி இருக்கிறது. மனிதகளும் மாறியிருக்கிறார்கள். அப்படியானால், இலக்குகள் பற்றிய புரிதலும் மாறவேண்டும். இலக்குகளைக் குறியீடுகளில்  இருந்து எடுத்து " என்  வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்" என்பதன் மீது செலுத்த வேண்டி இருக்கிறது.


இன்னும் 10  வருடங்களில் என் பேச்சைச் செவி மடுக்க இந்த தேசம் காத்திருக்க வேண்டும்,அம்மாவை அழைத்துவர என் கிராமத்துக்கு சொந்த ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டும், நண்பர்களுக்கு நான் கொடுக்கும் விருந்து பசுபிக் பெருங்ககடல் நடுவே நான் வாங்கியிருக்கும் குட்டி தீவில் நடக்க வேண்டும்.


என் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த இலக்குகளை உருவாக்குவோம்.
அந்த   கனவும்   இலக்கும் நாம் என்ன ஆக  வேண்டும் என்பதைச் சொல்லிவிடும்


திங்கட்கிழமை ஜெர்மனியிலும் ,செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்திலும் வெள்ளிகிழமை சீனாவிலும் இருக்கும்படியாக என் வாழ்க்கை அமைய வேண்டும் என்று முடிவு செய்தால் அதை அடைவதற்கான ஆயிரம் வாயில்கள் தென்படும்.


வாழ்க்கை குறித்து நாம் வரைந்து வைத்திருக்கும் வரைபடம் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருக்கும் போது


அதை அடைவதற்கான வாயில்களையும் அடையாளம் காண முடியும்.
குறியீட்டு இலக்குகளை வைத்துக்கொண்டு அடைபட்ட கதவுகளை அடித்துக் கொண்டு இருக்கலாம் அவ்வளவுதான்.


இன்னும் சில வருடங்களில் நிலவுக்கும் பூமிக்கும் சாதாரண மனிதர்கள் கூட ராக்கெட்டில் பயணிக்கலாம்.விலங்குகளுக்கு ஒரு மாத்திரை கொடுப்பதின் மூலம் அவை மனிதனைப் போல பேசும் நாள் வரலாம்.கம்யூட்டர்கள்  மொத்தமும் அழிந்து  போய் சின்னதாக ஒரு சிம்கார்டை உடம்பில் பொருத்திக்கொண்டால் உள்ளங்கையில் மானிட்டர் தெரியும் நிலை உருவாகலாம்.எயிட்சுக்கு எலி பாஷாணமும், கேன்சருக்கு அகத்திக்கீரையும் மருந்தென்று  முடிவு  செய்யப்படலாம். செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதர்களுக்கு சிறப்புத் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படலாம்.


இப்போது இருக்கிற சுழலை மட்டும் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு குறியீட்டை இலக்காக தீர்மானிக்காதீர்கள். நமது பயணத்தில் வாழ்க்கை நிறைய விசயங்களைச் சொல்லித்தரும், காலம் பல தளங்களை அறிமுகப்படுத்தும்.


ஒட்டுமொத்த உலகமும் ஒரே தீவாக மாறிப்போனாலும் அதில் எனக்கென்று ஒரு தனி இடம் வேண்டும் என்று சிந்தியுங்கள்.இலக்குகளை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது.


குறியீடுகளுக்குள் சுருங்கிகொள்ளாமல்  இலக்குகளை நோக்கி சிறகை விரிக்கலாம்.இது கனவுகள் நனவாகும் காலம்.

0 comments:

Post a Comment