Sunday, December 22, 2013

சிகரட் எனும் நல்ல பழக்கம்...!!!


எனக்கு சிகரட் குடிக்கும் நல்ல பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் சிகரட் பிடிப்பதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சிகரட் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரி படிக்கையில் நானும் என் நண்பனும் ஒரு பந்தயம் வைத்தோம். என்னவென்றால், யார் மூன்று வருடமும் சிகரட் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று.

"நான் அப்படி இருந்து காட்டுகிறேன்" என்றேன். என் நண்பனும் சிகரட் பிடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்றான். ஆனால், அவன் சொன்ன ஒரு விசயம் வேடிக்கையாக இருந்தது. என்னவென்றால், அவன் அப்படி சிகரட் பிடிக்காமல் இருந்தால், கல்லூரி கடைசி நாள் அன்று சிகரட் பிடிப்பதாக கூறினான்.

மூன்று வருடமும் நானும் சிகரட் பிடிக்கவில்லை, அவனும் பிடிக்கவில்லை. கடைசி நாள் அன்று அவன் சொன்ன படியே சிகரட் பிடித்தான். என்னையும் பிடிக்கச் சொன்னான். எவ்வளவோ முயன்றும் என்னால் மட்டும் முடியவில்லை.

பிறகு MCOM படித்தபோது, நாங்கள் எல்லோரும் கோவா டூர் சென்றோம். இரயில் திருச்சி ஜங்ஷனை தாண்டியதுமே எல்லோர் கையிலும் சிகரட், என் கையிலும்தான். ஆனால், என்னால் மட்டும் அந்த சுவையை உணரமுடியவில்லை.

இராணிப்பேட்டையில் என் நண்பன் ஒருவன், திடீரென 555 சிகரட் பாக்கெட் வாங்கினான்.

ஏனென்று கேட்டேன். அவன் கூறினான், " மாப்ளே, பையில 555 சிகரட் பாக்கெட் இருந்தா ஒரு ஸ்டேடஸ்டா" என்றான்.

அப்படி விளையாட்டாக ஆரம்பித்த அவன் பழக்கம் இப்போது விடமுடியாத பழக்கமாக மாறிவிட்டது. இன்னொறு வயதான நண்பருக்கு சிகரட்டே சரியாக பிடிக்க தெரியாது. ஆனால், பிடிப்பார். எப்படியென்றால், அவர் புகையை உள்ளே இழுக்க மாட்டார். ஆனாலும் ஒரு ச்செயின் ஸ்மோக்கர் போல் தன்னை காண்பித்துக்கொள்வார்.

ஒரு முறை நான் ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது என்னை மிகவும் வற்புறுத்தி என்னை சிகரட் பிடிக்க வைத்தார்கள். நான் மீண்டும் முயற்சித்தேன். ஒரே இருமல் தொடர்ந்து. இரண்டு சிகரட் பிடித்தேன். பிறகு என்னவோ எனக்கு அந்த நல்ல பழக்கம் வாய்க்க வில்லை.

எனது பெரியப்பா ஒருவர் சாகும் வரை சிகரட் பிடித்தார். அவர் சிறு வயதிலிருந்தே சிகரட் பிடித்ததாக என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு சிகரட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு அந்த கால உடம்பு. அதனால், பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது சிகரட்டினால் ஏற்படும் தீமைகளை பார்க்கும்போது, படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளது.

ஏன் சிகரட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்?

01. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரட் பிடிப்பதால் இறக்கிறார்கள்.

02. வாழ்நாள் முழுவதும் சிகரட் பிடிக்கும் இருவரில் ஒருவர், இந்த பழக்கத்தினாலேயே இறக்கிறார். பாதி பேர் மிக குறைந்த வயதிலேயே இறக்கிறார்கள்.

03. நிறைய பேருக்கு புற்று நோய் சிகரட் பிடிப்பதால் வருகிறது.

04. ஹார்ட் அட்டாக் வருவதற்கும், ஸ்ட்ரோக் வருவதற்கும் காரணமாகிறது.

05. உயர்ந்த இரத்த அழுத்தம் வருவதற்கும் காரணமாகிறது.

06. லங்க் கேன்சர் வருவதற்கும் நெக் கேன்சர் வருவதற்கும் காரணமாகிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்றவாரம் கோலாலம்பூரில் ஒரு மீட்டிங்கில் ஒரு சுவீடன் நாட்டு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. மலேசியாவில் இப்போது ஒவ்வொறு சிகரட் பாக்கெட்டிலும் ஒரு போட்டோ போட்டுள்ளார்கள். அதில் ஒருவருடைய தொண்டையில் கேனசர் உள்ளதை படமாக சிகரட் பாக்கெட்டின் அட்டையில் போட்டுள்ளார்கள்.

அவர் என்னிடம் கேட்டார்,

" உங்கள் நாட்டில் இப்படி சிகரட் பாக்கெட் அட்டையில் போட்டோ உண்டா?" என்று.

" இல்லை என்றுதான் நினைக்கிறேன்" என்றேன்.

" என் மனைவிக்கு தெரியாமல் சிகரட் பாக்கெட் மறைப்பது கஷ்டமாக உள்ளது" எனக்கூறினார்.

நான் கேட்டேன், " ஏன் சார், அப்படி மனைவிக்கு பயந்து, கேன்சர் வரும் என்று தெரிந்தும் சிகரட் பிடிக்க வேண்டுமா?"

அதற்கு அவர் கூறிய பதில்:

" SOMETIMES CANCER CURES SMOKING"

0 comments:

Post a Comment