Monday, January 6, 2014

தள்ளிப்போகும் 'வீரம்'...!



வீரம்’ தெலுங்கு வெளியீடு இரண்டு வாரங்கள் தள்ளிப்போட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வீரம் படம் ஜனவரி 10ம் திகதி வெளியாகவுள்ளது.

இதே நாளில் ‘வீரம்’ படத்தின் தெலுங்கு பதிப்பையும் முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஜனவரி 10ம் தேதி ஆந்திராவில் சங்கராந்தியை ஒட்டி மகேஷ்பாபுவின் ‘1’ படமும், ராம்சரண் தேஜாவின் ‘யவடு’ படமும் வெளியாகவிருப்பதால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘வீரம்’ தெலுங்கு டப்பிங்கை இரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வீரம் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு “வீருடொக்கடே” என்று பெயர் வைத்துள்ளனர்.

Sunday, December 22, 2013

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரக்கிறது

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

இலங்கைத்தமிழரின் திருமணம்..!

 
இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.

ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.

ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.

இலங்கையில்  திருமண உறுதிப்பபாட்டுக்குப் நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவர்களை நாடி பெண்ணைப் பெற்றவர்கள் ஓடினர். கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவர்கள் முன்னிடத்தை வகித்தார்கள்.

அவர்களில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலர் பண அடிப்படையில் போட்டி போட்டார்கள். அதிக பணம் கொடுக்க வல்லவர்கள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனர். இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞர்களது பெற்றோர் பெண்ணைப் பெற்றவர்களைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலர் கறந்து விடுவார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவர்கள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆயினும் பின்னர் நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞர்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.

இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோர் வயது முதிர்வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவர்கள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவர்கள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.

அடுத்ததாக ஜாதகம் பார்த்தல். ஜாதகம் பார்த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் ஜாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன.

திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் மூலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஜாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலர் எண் பொருத்தமும் பார்ப்பதுண்டு. ஜாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பார்த்தல் பலருக்கு உதவியது எனலாம்.

முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பார்ப்பதற்கும் அவனைப் படித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னர் பெற்றோர் ஓரளவில் அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனர். ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோர் ஆளாகினர்.

பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோர் அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.

இவை இப்படி ஒருபுறம் இருக்க இந்த கல்யாண முறைகளில் பல மாறுதல்களை எம்மக்கள்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொண்டுவர தொடங்கிவிட்டனர்.

 பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின் மிகவும் அதிகளவு மாற்றங்களைக் கொண்டது எனலாம். வேற்று இன மக்களின் குறிப்பாக வட இந்திய மக்களின் முறைகளில் நாட்டம் கொண்டு ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய படி சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினர்.

குறிப்பாக மணமகளின் குஜராத் சேலைகட்டும் முறை, மணமகனின் குருதார் உடை என்பனவற்றிலிருந்து அனைத்துமே மாற்றங்கள் பெறத்தொடங்கிவிட்டது.

இதைவிட வேறு ஊர் சம்பந்தம் ஏற்படும் போது, அவர்களும் ஆளாளுக்கு இது எங்கள் முறை, இது எங்கள் பழக்கம் என்று வாதிட, புதிதாய் சில மாற்றங்கள் தோன்றத்தொடங்கியும் விட்டன.

பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று  குறுகிய   நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோர் மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோர், அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சேர்க்கப் பட்டும், நீக்கப்பட்டும் விட்டது.

இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீர் இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.

சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக மூன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.

இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடர்வான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.

    * 1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

    * 2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிதுர்களை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    * 3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோர் அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவர்களது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    * 4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.

    * 5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

    * 6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,

    * 7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளர்ந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னர் அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவார்கள்.