Sunday, December 22, 2013

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!!!



          மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...

சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.

அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....

இதோ ஒரு சில டிப்ஸ்.....


யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.


மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)

பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.

நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.

நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.

பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.

ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.

கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.

அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.

“நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !...


“நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! அழாகான நகைகள்  ஆரோக்கியம் காக்குது!"  

நகைகள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் வர்ம சிறப்புப் புள்ளிகளை தூண்டுவதால் உடலில் சீரடைகிறது சக்தி ஓட்டம்!   எனவே நோய்கள் ஓட்டம்! ஆகவே ஆபரணம் அணிய நாட்டம் வரும்.  எனவே நலவாழ்வு நம் நகைகளில்!  என்னென்ன நகைகள் அணிவதால் எந்தெந்த நோய்கள் தாக்காமல் தடுக்கலாம் என அறிவோம்.  இடுப்புக்கு மேலே தங்க நகைகளும்,  இடுப்புக்கு கீழே வெள்ளி நகைகளும் அணிய வேண்டும்.  வெள்ளி இரத்த ஓட்டத்தை துள்ளி ஓடச் செய்யும்.


கண்கள் காக்கும் கம்மல் :-

காது குத்தி கம்மல் போடுவதால் கண்ணிற்கான வர்மப் புள்ளி தூண்டப்படுகிறது. காதில் நிறைய சிறப்புப் புள்ளிகள் உள்ளன. எனவேதான் பிள்ளையாரை வணங்கும் போது இரு காதுகளையும் கைகளால் பிடித்து தோப்புக் கரணம் போடுகிறோம்.  இதனால் மன அமைதி கிடைக்கிறது.  மூளை மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்பட ஏதுவாகிறது.  எனவேதான் முன்னோர்கள் ஆரோக்கியத்தோடு ஆணை முகத்தோன் வணங்குதலையும் வழக்கப் படித்தியுள்ளார்கள்! நன்றாய் நாள்தோறும் பழக்கப் படித்தியுள்ளார்கள்!


வாரம் இருமுறை எண்ணெய் குளியல் :-

 ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் செய்ய வேண்டும்.  திருமணமான தம்பதிகள்  இம்முறையை கடைப்பிடிக்க இல்லற இன்பம் சிறக்கும்.  சளி, தலைவலி,  உள்ளோர் தோல் சீவிய இஞ்சியை எண்ணையில் நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்த எண்ணையை பயன்படுத்த வேண்டும்.  



கண்கள், மூளைக்கு பலமூட்டும் கரிசலாங்கண்ணிக் கீரை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும்.

 மாலைக் கண் நோயில் நீலியும்,  சர்க்கரை நோய் அதிக ரத்தக் கொதிப்பில் நெல்லிக் காயோ அல்லது நெல்லி முள்ளிவற்றலோ சேர்த்து பயன்படுத்த கண்ணாடியின்றி கண் பார்வை பெறலாம்.

வியர்வை நாற்றம் போக...


குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

நலமான குழந்தை...


கருவில் இருக்கும் குழந்தைக்கு

தாயின் மனநிலையே .. சேயின் மனநிலை”

என்கின்றனர் சித்தர்கள்.

தாயின் சிறிய அதிர்வு கூட குழந்தையைப் பாதிக்கும்.

புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து கருவிலே குழந்தையின் மனநிலை வளர்ச்சியடைகிறது என்பதை அறியலாம். அபிமன்யுவின் தாய் கிருஷ்ணனின் உபதேசத்தை நல்ல மனநிலையில் உட்கிரகித்ததால்தான் அபிமன்யு கருவிலே உபதேசம் பெற முடிந்தது.

நல்ல குழந்தைக்கு தாயின் மனநிலையே முக்கிய காரணமாகிறது.

தாய் உறங்கும் வேளையில் கூட கருவில் இருக்கும் குழந்தை வெளியுலக சஞ்சாரங்களை கிரகித்துக்கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் நல்ல வார்த்தைகளையும், மெல்லிய இசையையும் கேட்க வேண்டும் என்றும் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சமீப பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் கருவிலே குழந்தையின் உடல் மட்டுமின்றி, மனநிலையும் வளர்ச்சியடைவதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியிருப்பதை படித்திருப்பீர்கள்.

கருவிலிருந்து குழந்தைகளை நோயின்றி பாதுகாத்து வருவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற வழி முறைகளையும் தெளிவாகக் கூறியுள்ளனர். நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். இதனால்தான் சித்தர்கள் கருவுற்ற தாய்க்கு பல கஷாய மருந்துகளைக் கண்டறிந்து சொன்னார்கள். இந்த கஷாயங்களை கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திற்கு எந்த கஷாயம் அருந்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினர். பழங்காலத்துப் பெண்கள் இந்த கஷாயங்களை அருந்தி பல குழந்தைகளை அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்தனர்.

தாயின் மனநிலை உடல் நிலை இரண்டுமே குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். கருவுற்ற பெண்களை இதனால்தான் தாய் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்தப் பெண் ஒரு ராணி போல் தாயாரால் பராமரிக்கப்படுகிறாள். கருவுறும் காலத்திலிருந்து அந்த பெண்ணின் மனநிலை மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்க முடியும்.

 கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்? இந்த வளைகாப்பின்போது அந்தப் பெண்ணுக்கு அனைவரும் வளையல் அணிவித்து சந்தனம் பூசும்போதும், உற்றார் உறவினர் வாழ்த்தும்போதும் அவளது மனம் ஆனந்தமடையும். அப்போது உடலானது புத்துணர்வுபெறும். இதனால் குழந்தை கருவில் நன்றாக வளரும்.

கருவுற்ற பெண்கள் மனதில் தயக்கம், பயம், ஏக்கம் எதுவுமின்றி இருக்க வேண்டும்.

வேலை காரணமாக நகரங்களுக்கு வந்து தனிக்குடித்தனம் செய்யும் பெண்கள் கருவுற்ற காலத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது நல்லது. அப்போதுதான் அப்பெண்ணின் மனதில் தனக்கு போதிய பாதுகாப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான உணவும், தேவையான ஓய்வும் வேண்டும்.

ஆனால் நவீன உலகில் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தங்களின் பொருளாதாரத் தேவையை எண்ணியே அலைகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிறக்கச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அவ்வப்போது சிறிது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்...