Sunday, December 22, 2013

கம்ப்யூட்டர் பத்து வகை...!


கம்ப்யூட்டர் பத்து வகை

பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கையில் உடனே நாம் அன்றாடம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகிறது. லேப் டாப் என்று சொல்கையில் சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பலருக்கு அவர்களின் அதிகாரிகள் அல்லது வளரந்து வேலை பார்க்கும் அல்லது உயர் கல்வி படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இன்னும் சிலவகைக் கம்ப்யூட்டர்களும் புழக்கத்தில் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.


மைக்ரோ ப்ராசசர் பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் கம்ப்யூட்டர் என்று கூறலாம். ஆனால் நாம் எண்ணுவதெல்லாம் மவுஸ் அல்லது கீ போர்டு வழியாக தகவல்களை அனுப்பி ஏதேனும் ஒரு நவீன வழியில் அவற்றை ஒரு செயல்முறைக்கு உள்ளாக்கி முடிவுகளைத் திரையில் காட்டும் சாதனத்தை மட்டுமே கம்ப்யூட்டர் எனக் கொண்டுள்ளோம். இங்கு அதன் வகைகளைப் பற்றி காணலாம்.


1. பெர்சனல் கம்ப்யூட்டர்: ஒரு நேரத்தில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பொதுவான பல பயன்பாடுகளுக்கான ஒரு கம்ப்யூட்டர். மேக் ( Mac) என்பதுவும் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் தான். ஆனால் நம்மில் பலர் விண்டோஸ் அல்லது லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை மட்டுமே பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்கிறோம்.


2. டெஸ்க்டாப்: எங்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாத, ஒரு மேஜை மீது வைத்துப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டரே டெஸ்க் டாப் கம்ப்யூட்டர். பொதுவாக இதனை ஒரு நிலையான இடத்தில் வைத்துப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு அதிக செயல்திறனை அளிக்கின்றன. அத்துடன் தகவல்களை ஸ்டோர் செய்திடும் வசதியையும் தருகின்றன.


3. லேப்டாப்: இதனை நோட்புக் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கின்றோம். எங்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்களே லேப்டாப் கம்ப்யூட்டர்கள். டிஸ்பிளே, கீ போர்டு, பாய்ண்ட்டிங் டிவைஸ் அல்லது ட்ரேக் பால், ப்ராசசர், மெமரி, ஹார்ட் டிரைவ் என அனைத்துக் கொண்டு பேட்டரியின் திறனிலும் செயல்படக் கூடிய கம்ப்யூட்டர் இது. ஒரு பெரிய ஹார்ட் பவுண்ட் புத்தகத்தைக் காட்டிலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இப்போது இதன் அளவும் குறைந்து வருகிறது.


4.பி.டி.ஏ.(PDA): பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (Personal Digital Assistant)என்பதன் சுருக்கம். இதில் மெமரியைத் தர ஹார்ட் டிஸ்க்குக்குப் பதிலாக பிளாஷ் டிரைவ் பயன்படுகிறது. இதில் வழக்கமாக கீ போர்டு இருக்காது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் வழி தகவல் உள்ளீடு செயப்படும் செயல்பாடு தான் இதன் அடிப்படை. ஒரு பேப்பர்பேக் நாவலைக் காட்டிலும் சிறியதான அளவில் இது கிடைக்கிறது. எடையும் குறைவு; பேட்டரியில் இயங்குவது. இந்த அளவில் சற்று அதிகமான அளவில் உள்ளதை ஹேண்ட் ஹெல்ட் (Handheld Computer) கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகிறது.


5. ஒர்க் ஸ்டேஷன் (Work Station): இதுவும் ஏறத்தாழ ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் தான். ஆனால் சாதாரண பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர் இதில் இருக்கும். கூடுதல் மெமரி தரப்பட்டிருக்கும். பல பணிகளை இணைத்துச் செயல்படுத்த கூடுதல் சிறப்பு வழிகள் இதில் உண்டு. முப்பரிமாண கிராபிக்ஸ் பேக்கேஜ் மற்றும் கேம்ஸ் தயாரிக்கும் பணிகளை இதில் மேற்கொள்ளலாம்.


6.சர்வர் (Server): ஒரு நெட்வொர்க் மூலமாக பல கம்ப்யூட்டர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் மற்றும் தகவல்களைத் தரும் கம்ப்யூட்டர். பொதுவாக சர்வர்களாகச் செயல்படும் கம்ப்யூட்டர்கள் அதிகத் திறன் கொண்ட ப்ராசசர்களைக் கொண்டிருக்கும். ஏகப்பட்ட அளவில் ராம் மெமரியும், அதே அளவிற்கு ஈடு கொடுக்கும் அளவில் ஹார்ட் டிஸ்க்கும் கொண்டிருக்கும்.


7. மெயின் பிரேம் (Mainframe): கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் ஒரு பெரிய அறை முழுவதையும் எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். ஏன், ஒரு மாடிக் கட்டடத்தில் முழு தளத்தையும் எடுத்துக் கொண்டிருக்கும். பிற்காலத்தில் கம்ப்யூட்டர்களின் அளவு குறைந்து கொண்டே வர மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்பது என்டர்பிரைஸ் சர்வரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது கூட பெரிய நிறுவனங்களில் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் என்ற சொல்லை அவர்களின் கம்ப்யூட்டர் களுக்குப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஒரு நேரத்தில் பல லட்சக்கணக்கான தகவல்களை செயல் பாட்டிற்கு எடுத்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தகவல்களைத் தரும் திறன் கொண்டவை.


8. மினி கம்ப்யூட்டர் (Mini Computer): இந்த சொல் தற்போது அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் மெயின் பிரேம் கம்ப்யூட்டருக்கும் இடை நிலையில் இயங்கி வந்த கம்ப்யூட்டர்களைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மிட் ரேஞ்ச் சர்வர் (Mid Randge Server)என்றும் அழைக்கின்றனர்.


9. சூப்பர் கம்ப்யூட்டர் (Super Computer): கோடிக்கணக்கில் பணம் செலவழித்தால் தான் இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைக்க முடியும். சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் தனிக் கம்ப்யூட்டர்களாகச் செயல்பட்டாலும் கூடுதல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் இணையாகச் செயல்படும் கூட்டுக் கம்ப்யுட்டராகத்தான் இது அமையும். கிரே சூப்பர் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம் இத்தகைய கம்ப்யூட்டர்களைத் தயாரித்துத் தருகிறது.


10. வேரபிள் கம்ப்யூட்டர் (Wearable Computer): கம்ப்யூட்டர் உலகில் அண்மைக் காலத்தில் வந்து அனைவரின் பாராட்டுதலைப் பெற்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இது. ஒரு கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அன்றாட அத்தியாவசிய செயல்பாடுகளை (email, database, multimedia, calendar/scheduler) ஒரு கடிகாரம், மொபைல் போன், ஏன் ஆடைகளில் கூட கிடைக்கும்படி அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதே வேரபிள் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் அணியக் கூடிய கம்ப்யூட்டர்.


மேலே கூறப்பட்டவை எல்லாம் பொதுவான கம்ப்யூட்டர் வகைகள். இப்போது கம்ப்யூட்டரை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாத வகைகளில் எல்லாம் கொண்டுவரும் முயற்சிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஹ்யூலட் பேக்கார்ட் நிறுவனம் டச் ஸ்மார்ட் பிசி ( Touch Smart PC) என்ற ஒன்றை அண்மையில் இயக்கிக் காட்டியது. இது விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஐ–போன் போலவும் செயல்படுகிறது. டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.


ஜப்பான் நாட்டின் மட்சுசிஸ்டா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரியல் நிறுவனம் டப் புக் (Toughbook) என்ற பெயரில் போர்ட்டபிள் கம்ப்யூட்டர் ஒன்றை மருத்துவ செயல்பாடுகளுக்கென வடிவமைத்து வழங்கியுள்ளது. இது குறைந்த மின் சக்தியில் இயங்கும் Atom ப்ராசசரில் இயங்குகிறது. எல்.சி.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. அடுத்து ஒவ்வொருவரும் முதலிலேயே பணம் செலுத்திவிட்டு செலுத்திய கடையிலிருந்து தங்கள் கைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்து பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள் வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


மீடியா சென்டர் பிசி (Media Center PC) என்ற ஒரு வகை கம்ப்யூட்டர் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இது ஆடியோ மற்றும் வீடியோ ரிசீவரையும் கொண்டுள்ளது. இதில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்டேட் செய்திடும் வசதி உண்டு. இதனால் இது ஒரு ஹோம் தியேட்டராகவும் செயல்படுகிறது.


NEC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அண்மையில் திரவத்தின் மூலம் சூடு தணியும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கிக் காட்டினார். Valuestar VW790 என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரின் சிபியு மற்றும் ஹார்ட் டிரைவ் திரவத்தைப் பயன்படுத்தி குளிர்ச்சி அடையும் வகையில் பிளேட்டுகளைக் கொண்டு இயங்குகின்றன. இந்த வகையில் வரக் கூடிய அடுத்த நிலை பெர்சனல் கம்ப்யூட்டர் லேப் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான இடத் தையே டேபிளில் எடுத்துக் கொள்ளும்.

மதுபானத்தை விட குளிர்பானம் ஆபத்துங்க...



“மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்!’ சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், “ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை விட, குளிர்பானம் குடிப்போருக்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட, 85 சதவீத வாய்ப்பு உள்ளது.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற “ப்ரக்டோஸ்’ சத்துள்ள ஜூஸ்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில், கீல்வாத நோயால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரிடம், “இன்டர்நெட்’ மூலம் சர்வே நடத்தப்பட்டது. அவர்களில் பலரும் 12 ஆண்டுக்கு மேல், குளிர்பானம் குடித்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் பழக்க வழக்கம், உடல் நிலையை வைத்துத் தான் ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!


சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இன்றிலிருந்து சில மாதங்களில் Yahoo Search ஆனது Microsoft இன் Bing தேடு பொறியின் அணுசரனையில் இயங்க தொடங்கும். 10 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பேரத்தினால் Yahoo சுமார் $275 million லாபத்தை எதிர்பார்க்கிறது. இரு தரப்பிலும் பல பயனுள்ள மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மற்றும் விளம்பர வருவாய் தரக்கூடிய மாற்றங்கள் இணையத்தள உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Google இற்கு போட்டியாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் சிலவேளைகளில் யாகூவின் இன்னொரு பின்னடைவாக கூட அமையலாம் என கணணி வல்லுனர்களால் ஊகங்கள் எழுந்துள்ளன.

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்...



1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள் மனம் விட்டு

சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.