Thursday, January 23, 2014

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி..!




அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை

இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.

இதையடுத்து பேசிய சுவர்ணல்ட்சுமி”ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள்” என்கிறார்.இப்படி உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி சுவர்ண லட்சுமியை நீங்களும் வாழ்த்துங்களேன்!!

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?


 சரி, தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான். Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

 ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.

 பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை!

விக்ரமனின் நினைத்தது யாரோ..!



தமிழ் சினிமாவில் அழகான குடும்பக் கதைகள் எடுப்பதில் கைதேர்ந்தவரான விக்ரமனின் நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரமனின் படங்கள் பெரும்பாலும் அமைதியும், பண்பும் நிறைந்த பாத்திரங்களால் சூழப்பட்டிருக்கும். மேலும் பெரும்பாலும் அவரது
பாத்திரங்கள் அனைத்துமே நல்லவர்களாகவே படைக்கப்பட்டிருப்பார்கள்.

இளைய தளபதி விஜயின் மெஹா ஹிட் படமான பூவே உனக்காக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சூர்ய வம்சம், கேப்டன் விஜயகாந்தின் வானத்தைப் போல, சூர்யாவின் உன்னை நினைத்து என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களை இயக்கியவர் விகரன்.

அதிரடி ஹிட் படங்களைக் கொடுத்துவந்த விக்ரமன் சமீபக் காலங்களில் அதிகப் படங்களை இயக்கவில்லை. அவரது இயக்கத்தில் கடந்த 2009ல் மரியாதை திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறையும் விக்ரம் ஹிட்டடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Wednesday, January 22, 2014

ரூ.100 கோடி குவித்த ‘ஜில்லா’..!



ஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் ஆகிய இரு படங்களும் வெளியாகின.

இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால், இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு மேலும், வீரத்துக்கு அதைவிட ஓரிரு கோடிகள் குறைவாகவும் வசூலாகியுள்ளதாக தெரிய வருகிறது.

சில இணைய தளங்களில் ஜில்லா 70 கோடி குவித்துவிட்டதாகவும், வீரம் ரூ 58 கோடி குவித்துள்ளதாககவும் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ஜில்லாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அந்தப் படம் ரூ 100 கோடியை வெறும் 7 நாட்களில் குவித்துவிட்டதாக ஒரு படத்தை டிசைன் செய்து செய்தி வெளியிட்டுள்ளனர்.