Wednesday, December 4, 2013

விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?



அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும்.


ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபடலாம்; உயர்வும் கொள்ளலாம். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பலர் தங்களுக்கு ஏற்ற பணியை பெற்றார்களா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். மேலும், சில கல்வி நிறுவனங்களில் பயின்றால் உயர்ந்த வேலைக்கு சென்று விடலாம்.ஆனால், இவை பெரும்பாலும் சாமானிய மாணவர்களுக்கு எட்டுவதில்லை.


தமிழக வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் மட்டும் 2.50 லட்சம் பொறியாளர்கள் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். தவிர, கடந்த காலங்களில் என்ஜினியரிங் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த மாணவர்கள் பலர் தற்போது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதையே அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.


தற்போதைய பாடத்திட்டத்தின்படி சிவில் இன்ஜினியரிங் பயின்ற மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தன்னிச்சையாக கட்டுமானப் பணியில் கோலோச்சி விடமுடியாது. முதலில் அவர்கள் கொத்தனார் அல்லது வேறு ஒரு என்ஜினியருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு தொழில் நுட்பங்களை பயின்ற பிறகுதான், தனக்கென தனி முகவரி தேட முடிகிறது.


உயர்கல்வி என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. இன்னும் செயல் விளக்கம் பெறவில்லை. வரும் 2020இல் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் 4.5 கோடி அளவில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் ஏற்பட போகின்றனவாம். அதற்கு இன்னும் ஏழு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றை நிரப்ப இப்போது இருக்கும் கல்வியின் தரத்தை வைத்து சர்வதேச அளவில் எப்படிப் போட்டியிட முடியும்?


இப்பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுவான பாடத்திட்டம் கொண்டுவர தமிழக உயர்கல்வி மன்றம் தீர்மானித்துள்ளது. இதற்காக, பல்கலை துணைவேந்தர்கள் கூட்டம் விரைவில் கூடுகிறது.


இதற்கு, மாணவர்களை அதிகம் தக்க வைத்திருக்கும் பல்கலைக்கழககள் சம்மதிக்குமா என்பதும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் ஒத்துழைக்குமா என்பதும் சந்தேகமே.


புரியாத பாடங்களை மனப்பாடம் செய்து பழக்கப்பட்டு விட்டோம். அப்போதும், மனதில் பதியாவில்லையெனில், குறை மாணவன் மீது மட்டும் தான் சுமத்தப்படுகிறது.


உயர்கல்வியின் நிலைமைதான் இப்படி என்றால், பள்ளிக் கல்வியின் நிலைமையோ மேலும் கீழுமாக இருக்கிறது. கூலித் தொழிலாளி மகனுக்கு சமச்சீர் கல்வி, அரசு பணியாளர் மகனுக்கு மெட்ரிக் கல்வி, தொழிலதிபர் மகனுக்கு சிபிஎஸ்இ கல்வி, அதற்கும் மேல் வசதியுள்ளவர்களின் குழந்தைகளுக்கு இன்டர்நேஷனல் கல்வி என்று விலைக்கு தகுந்தாற் போல கல்வியை பிரித்து வைத்திருக்கின்றனர்.


மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த கல்வியை கற்பதோடு மத்திய அரசின் ஒரு அமைப்பான என்சிஇஆர்டி வெளியிடும் புத்தகத்தையும் படித்தால் தான் தேர்வில் வெற்றி பெற முடியும். பல அரசு, தனியார் தேர்வுகளுக்கு நாம் பயிலும் பாடபுத்தகங்கள் பயன்படுவதே இல்லை. போட்டித் தேர்வுகள் தான் கல்வியின் தரத்தை தீர்மானிக்கிறது.


தற்போது மாணவர்கள் பயிலும் பாடபுத்தகங்களை விட மாணவர்களுக்கு எவ்வாறு கற்று கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக ஆசிரியர்கள் சுமக்கும் பாடபுத்தகங்கள் அதிகரித்து விட்டன. மேலும் யார் உருவாக்கிய பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்குவது என்ற போட்டியும் ஒருபுறம் நிலவுகிறது.


இதுதவிர, முன் மாதிரி பள்ளிகளும் ஆண்டுதோறும் திறக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் பின்தங்கிய இடத்தில் மட்டும் அரசு சார்பில் முன் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கல்வி மேம்பட்ட இடங்களிலும் இப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


காணும் இடமெங்கும் கல்விக்கூடங்கள். வெவ்வேறு விதமான பாடபுத்தகங்கள். சந்தேகத்தை அலசிக் கொள்ள இணையதளங்கள்.
ஆக, வீட்டிலோ, வகுப்புக்கு சென்றோ எப்படியும் பாடங்களை பயிலலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி மாணவர்களுக்கு வேண்டியது தரமான கல்வி, பள்ளியும், பாடப்புத்தகமும் அடங்கிய அதன் கட்டுமானம் மட்டுமல்ல. சர்வதேச அளவில் போட்டியிட நம்மவர்கள் தயாராக வேண்டும். இதுகுறித்து கல்வியாளர்கள் சிந்திப்பார்களா?

0 comments:

Post a Comment