Tuesday, December 3, 2013

"கடமையை செய் பலனை எதிர்பாராதே!"


கடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும்.


நீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக, ஊருக்காக உழையுங்கள் அதன் பலனை எதிர்பாராதீர்கள். இப்படி உங்களிடம் யாராவது சொன்னால் ஏற்க முடியுமா? நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு வேலைகளில், சுத்தம் செய்தலில், புதைகுழிகளில் பிணம் எரித்தலில் ஈடுபடுங்கள் அது உங்கள் கடமை. ஆனால் இந்த வேலைக்கு பலனாக பொருள், செல்வம், கல்வி, புகழ், மனிதநேயம் என எதையும் எதிர்பாராமல் உழையுங்கள். இந்த வார்த்தைகள் யாருக்காக? உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சாதி அடிமைகளாக்கப்பட்ட மக்களுக்கு என சொல்லப்பட்டதா? இல்லை உண்டு கொழுத்து, உழைப்பவன் மீது ஏறி மிதிக்கிறவர்களுக்கு ஆதரவாக; அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அடக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கீதை உருவாக்கப்பட்ட காலச்சூழலோடு புரிந்து கொள்வது அவசியம்.


இந்துக்களுக்கு புனித நூல் என புகுத்தப்படுகிற பகவத்கீதை எல்லாருக்கும் பொதுவான கருத்தை சொல்கிறதா? கீதை ஆரிய சார்புத்தன்மையுடன் வர்ணாஸ்ரம சாதி அமைப்பில் இருக்கிற உயர் சாதியினருக்கு ஆதரவாக பிராமணீயத்தை உயர்த்தி வைக்கிறது. கீதை திராவிட மக்களின் வாழ்வின் விடுதலைக்கு சொந்தமானதல்ல. கீதை உருவாக்கப்பட்ட விதம் எப்படியானது? ஆரியர்கள் படயெடுத்து வந்து சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களை துரத்தி, அவர்களது நாகரீகத்தை, வாழ்க்கைமுறையை சிதைத்து தங்களுக்கு சாதகமான விதிகளை, கதைகளை உருவாக்கினர். அவை வேதங்கள், உபநிடங்கள், சாத்திரங்கள் என பல வழிவங்களில் உருவாக்கப்பட்டது. இவை அனைத்திலும் பிராமணீயம் வெளிப்படுவதை காணலாம். பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் ஆதரவான கருத்துக்களை வேதங்களும் சாத்திரங்களும் உள்ளடக்கியது. மகாபாரதம் என்கிற கதையை உருவாக்கியதும் அந்த விதத்தில் தான்.


பகவத்கீதை என்பது குருஷேத்திர யுத்தத்தில் தேரோட்டும் சாரதியான கண்ணன் அர்சுனனுக்கு அருளிய உபதேசங்கள். மகாபாரத கதையில் நடந்ததாக சொல்லப்படுகிற ஒரு பகுதியை தொகுத்த நூல் தான் பகவத்கீதை. நமது மக்களுக்கு அறவழியை, அன்பை, மனிதநேயத்தை, ஒழுக்கமான வாழ்வை போதிக்கிறதா கீதை? போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பவர்களில் தனது உறவினர்களை, சித்தப்பாமார்களை....காண்பதாகவும். அவர்களை கொன்றுகுவித்து தான் நாட்டைப் பிடிப்பது தேவையில்லை என்கிறான். அவனது மனிதத்தன்மையை பாருங்கள். அப்படிப்பட்ட குணத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு எதிரில் நிற்பது யாரென பார்க்காமல் தாக்கி கொலைகள் செய்ய கண்ணன் வழங்கிய அறிவிரை தான் கீதை. கொடுத்த வாக்குறுதிகளையும் போர்க்கள விதிகளையும் மீறி தந்திரங்களால் எதிரியை கொலை செய்தவன் கண்ணன். கிருஷ்ணனுக்கு 16022 மனைவிமார்கள் இருந்ததாக மகாபாரதக் கதை கூறுகிறது. ஒழுக்கத்தில் உயர்ந்தவனா கண்ணன்? கோபியர்கள் குளத்தில் குளித்த போது கரையில் இருந்த அவர்களது உடைகளை எடுத்து சென்றவன் கண்ணன். கரயேற முடியாத தவிப்பில் தங்களது உடைகளை திரும்ப தருமாறு கோபியர்கள் கெஞ்சிய வேளை; கரைக்கு வந்தால் உடைகளை தருவதாக சொன்னவன் கோகுலக் கண்ணன். பெண்களிடம் ஒழுக்கம் மற்றும் எல்லைகளை கடந்து நடந்த ஒருவனை கடவுள் என்று பாராட்டி போற்றுவது மக்களுக்கு எந்த முன்மாதிரியை கற்றுத்தருகிறது?


கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கியத்தை நடைமுறை வாழ்வில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை என்ன ஆனது? மேல்சாதி அடிமைத்தனத்திற்கும், பணக்கார வர்க்க அடக்குமுறைக்கும் சந்ததிகளை இழந்து கூனி குறிகி கை கட்டி வாய் பொத்தி நிற்பது மட்டும் தான் மிஞ்சியது. நிலச்சுவாந்தாராக இருக்கிற மேல் சாதிப் பண்ணையாரின் பெல்ட் அடி, செருப்படி, சித்திரவதைகள் அனைத்தையும் அனுபவித்தாலும் வாய்பேசக்கூடாத விதி. அந்த வேதனையிலும் "இது என் தலைவிதி, அவுக செய்துப்போடலாம் என்ன இருந்தாலும் அவாளை நம்பி நாம பொழைக்கணும். நாம நம்ம வேலையை செய்வோம் கடவுள் பாத்துப்பார்" என்ற முனகல்களும், எண்ணக்குமுறல்களும் எத்தனை சந்ததிகளின் வாழ்வை
தொலைத்திருக்கிறது?


சூத்திரர்களும், பஞ்சமர்களும் நாள் முழுவதும் உழைத்து அதன் பலனை வணிகம் செய்பவன், அரசன், பூசை செய்பவன் அனுபவிக்க ஊரின் ஒதுக்குப்புறத்தில் அல்லது காடுகளில் ஒழிந்து வாழ்வது தான் கடமையா? கோவில் முதல் அனைத்தையும் உடல் உழைப்பால் கட்டியெழுப்பி கடமையை செய்து; மரியாதை முதல் வழிபடும் உரிமை வரை வேடிக்கை பார்ப்பவர்கள் அனுபவிக்க கொடுப்பதா கடமை? இந்த புறக்கணிப்பின் வேதனையை பொறுத்துக் கொள்வது தான் கீதை சொல்லும் கடமையா?கடமையை செய்தால் அதன் பலனை அனுபவிக்க உழைப்பவனுக்கு உரிமையுண்டு. இதை தடுப்பது கண்ணனின் உபதேசமாக இருந்தால் அவன் முழுமுதல் கடவுளல்ல! வர்க்க பேதத்தையும் வர்ணபேதத்தையும் கட்டிக்காக்கிற முதன்மையானவன்.


அடக்குமுறையிலிருந்து விடுதலையை தருவது தான் நல்ல நெறியாக இருக்கமுடியும். கட்டுகளிலிருந்து கட்டற்ற தன்மைக்கும். விலங்குகள் பூட்டிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த மனிதர்களாகவும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களிலிருந்து முழு உரிமையுள்ள சமமான மனிதர்கள் என்பதுவும் தான் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான அணுகுமுறை.


கீதை "கடமையை செய்! பலனை எதிர்பாராதே" என்பதை திருத்தி படியுங்கள்! கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்!


 வர்ண, வர்க்கபேதமற்ற மனிதர்களாக நடைபயில்வோம்!


கிருஷ்ணனின் இந்த மாயாஜாலம் இனி அவசியமில்லை!!

0 comments:

Post a Comment